நாகர்கோவில், மே 26 –
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிக மரபாகும். வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளாக பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இன்று நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெருவைச் சேர்ந்த தவத்திரு இசக்கிமுத்து சுவாமிகளால் தொடங்கப்பட்ட அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசி மகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரையைத் தொடங்கினர்.
முன்னதாக, நாகராஜா கோவில் அருகிலுள்ள நடராஜர் கோவிலில் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், திருவாசகம் முற்றோதல் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், முருகப்பெருமானுக்கு உகந்த பன்னீர், திருநீறு உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் காவடிகளில் கட்டப்பட்டு, பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இந்த பாதயாத்திரைக் குழுவினர் வருகின்ற 29.05.2026 அன்று திருச்செந்தூர் சென்றடைய உள்ளனர். அங்கு கடலில் புனித நீராடி, காவடிகளில் சுமந்து சென்ற அபிஷேகப் பொருட்களை செந்திலாண்டவருக்கு சமர்ப்பித்து வழிபட்டு, வைகாசி விசாக விழாவை முன்னிட்டு முருகப்பெருமானை தரிசனம் செய்ய உள்ளனர்.
பாதயாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள், முருகப்பெருமானின் அருளைப் பெறும் நோக்கில் பக்தி, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக உணர்வுடன் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பக்தி உணர்வை ஏற்படுத்தியுள்ளது.



