தென்காசி, செப்டம்பர் 22 –
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இலஞ்சியில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழகக் கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வாரிய தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் பேசியதாவது: அனைத்து மாநிலங்களின் தாய் மொழிக்கு பிரதமர் மோடி செய்யும் துரோகத்தை படம் பிடித்து காட்டுகிற தேசிய தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருவதாக தென்காசியில் கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் நான் ஒரு திருக்குறள் கூறுகிறேன் என கூறுவதையும் பாரதியார் கவிதைகளை கூறுகிறேன் என கூறுவதையும் தனது நகைச்சுவை பாணியில் பேசினார். சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் கொண்டு வந்து தமிழுக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அவரவர் தாய் மொழிக்கு பிரதமர் மோடி செய்யும் துரோகத்தை படம் பிடித்து காட்டுகிற தேசிய தலைவராக ஸ்டாலின் விளங்கி வருகிறார். ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பஜனை பாடி பகல் கனவு காணும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிம்ம சொப்பனமாக திமுக தலைவர் ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
உலக நாடுகளில் எங்கேயும் நடைபெறாத வகையில் பீகாரில் 85 லட்சம் மக்களின் வாக்குரிமையை பறித்து வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த சதி திட்டம் தமிழகத்தில் நடந்துவிடக் கூடாது என்று அதனை முறியடிக்கும் வகையில் அதற்கான தயாரிப்பு பணிகளை முதல்வர் தொடங்கியுள்ளார். வட இந்தியா மற்றும் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தலை குனியவும் மாட்டேன், அடிமையாகவும் மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்று தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று பேசினார். முன்னதாக இந்த கூட்டத்தில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



