திருப்பூர், ஆகஸ்ட் 04 –
காங்கேயம் சாலை ராக்கியபாளையம் அருகே வசித்து வருபவர் இந்திரா சுந்தரம். இவர் தன்னுடைய கணவர் சுந்தரம் அவர்களின் நினைவாக இந்திரா சுந்தரம் என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தக்கூடிய அவசர ஊர்தியை வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவாக கொண்ட இந்திரா சுந்தரம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் தன்னுடைய முழுச் செலவில் வருடம் முழுவதும் இலவசமாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு அவசர ஊர்திகளில் செல்லும் பொழுது அவர்களுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர ஊர்தியை தற்பொழுது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி உள்ளதாகவும் விரைவில் எமர்ஜென்சி ICU வசதியுடன் கூடிய அவசர ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளதாகவும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் அழைத்தாலும் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வரை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.