தஞ்சாவூர், ஜூன் 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக 2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கு ரூபாய் 25,331.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: இக்கூட்டத்தில் மத்திய, மாநில கடன் திட்டங்களும் மாவட்டத்தில் ஆண்டு கடன் இலக்கின் அம்சங்களும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் 2025- 2026 ஆம் நிதியாண்டில் வேளாண் துறை சார்ந்த பணிகளுக்கு ரூபாய் 20,929.61 கோடியும், சிறு குறு தொழில் சார்ந்த துறைக்கு ரூபாய் 3,391.1 கோடியும் கல்வி துறைக்கு ரூபாய் 50.78 கோடியும் என ஆறு பிரிவுகளில் கீழ் மொத்தம் சுமார் ரூபாய் 25,331 32 கோடி முன்னுரிமை கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை வங்கியாளர்கள் நூறு சதவீதம் நிறைவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார் கலெக்டர்.
கூட்டத்திற்கு தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி முன்னிலை வகித்தார். மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி குழு மேலாளர் ஸ்ரீதர், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.