தஞ்சாவூர், செப்டம்பர் 11 –
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் நாட்டுப் புற கலை பயிற்சிக்கான சேர்க்கை செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும்.
இப்பயிற்சியில் இசை நாடகம், கும்மி கோலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நான்கு கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பயிற்சி திருவையாறு இசைக்கல்லூரி வளாகத்தில் வாரம் தோறும் வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பகுதி நேரமாக நடைபெறும்.
ஓராண்டு கால சான்றிதழ் படிப்பாக நடத்தப்படும் பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 வயதிற்கு மேல் அனைவரும் சேரலாம். இப்பயிற்சிக்கு ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் ரூபாய் 500 மட்டுமே.
விருப்பம் தெரிவிப்பவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள இசை கல்லூரிக்கு நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 – 261600, 9791466148 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



