நாகர்கோவில், ஜூன் 23 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர்களை பாராட்டிய பொதுமக்கள். நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போடப்பட்ட குடிநீர் இணைப்பிலிருந்து உடைப்பு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த உடைப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் சாலையை தோண்டி சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் பணிகள் நிறைவடைந்ததும் பெயரளவில் மட்டுமே அந்த இடங்களை மூடி விட்டு செல்வதால் இந்த சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்திப்பதுடன் பாதசாரிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குண்டும் குழியுமான சாலையால் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் உத்தரவின் பெயரில் உதவி ஆய்வாளர் சுமித் அல்ட்ரின் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் சாலையில் உள்ள பள்ளங்களை மண் மற்றும் ஜல்லியை கொண்டு நிரப்பி பள்ளத்தை சரி செய்தனர். இதனால் பல நாட்களாக பள்ளங்களாக காணப்பட்ட சாலைகள் தற்போது பழைய நிலைக்கு வந்துள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையிலும் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாரின் மனிதாபிமானம் மிக்க செயலை வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.