கோவை, ஜூலை 29 –
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா, அவிநாசி சாலை ஜென்னி ரெசிடென்ஸி ஓட்டலில் நடந்தது. விழாவில் கோவையில் முழுமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு வீட்டு வசதி துறைக்கு பாராட்டு விழா, சிறந்த ரியல் எஸ்டேட் தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் விழா மற்றும் கூட்டமைப்பு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றன.
விழாவில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது: ரியல் எஸ்டேட் தொழில் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஜாதி, மத, பேதமின்றி எல்லோரும் ஒரே இடத்தில் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பது ரியல் எஸ்டேட் ஆகும். இங்குள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப்களில் இருந்து கொண்டு பிறருக்கு உதவி வருவது பாராட்டுதலுக்குரியது.
முன்னதாக நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய ஆணையாளர் பிரியகுமார், கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி, தேசிய செயலாளர் செந்தில்குமார், தேசிய துணை செயலாளர் பாலசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.