நாகர்கோவில், ஏப். 6 –
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
இதில் சுயஉதவிக் குழுவினர் இணைந்து வெற்றிலை, வாழை இலை, பழம், தென்னங்கீற்று, தேங்காய் பிஞ்சு, சிப்பி, சங்கு, புளியமுத்து, மர சீனிகிழங்கு வற்றல், மாதுழை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை கொண்டு, 100 சதவீதம் வாக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கேக், ஊட்டியதோடு, அவர்கள் தவறாமல் வரும் ஏப்ரல் 23ம் அன்று வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட இயக்குநர்கள் கலைசெல்வி, வளர்மதி, மகளிர் சுய உதவி குழுவினர், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



