கிருஷ்ணகிரி, செப்.15:
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நளினி தலைமை வகித்தார். பறக்கும்படை வட்டாட்சியர் பூவிதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளரும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கே.எம். சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து விளக்கினார். ரேஷன் கடைகளில் பொருட்களின் எடையை சரிபார்க்க வேண்டும் என்றும், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கட்டாயம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் நுகர்வோர் தொடர்பான பிரச்சினைகளை உரிய முறையில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் நல்லசாமி, மாநில மகளிரணி செயலாளர் பத்மா, மாவட்ட தலைவர் சிவசக்திவேல், மாவட்ட செயலாளர் மாதேஷ், மாவட்ட இணைச் செயலாளர் தில்லைராஜா, மாவட்ட மகளிரணி தலைவி ராதா, துணைத் தலைவி சரண்யா, அஞ்செட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் குரு கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் பறக்கும்படை வட்டாட்சியர் பூவிதன் மற்றும் டாக்டர் கே.எம். சந்திரமோகன் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவில் முதுகலை ஆசிரியை சுலக்சனா நன்றி கூறினார்.



