மார்த்தாண்டம், ஜூலை 11 –
தேங்காப்பட்டணம் அருகே அம்சி பகுதி சேர்ந்தவர் மதன்சிங் மகன் பின்சிங் (20). மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பைக்கில் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். காப்புக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வழியில் நின்ற சரக்கு வாகன டிரைவர் திடீரென கதவை திறந்தார்.
இதில் பின்னால் பைக்கில் வந்த பின்சிங் வாகன கதவில் மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கிய மாணவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மாணவனின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வேன் டிரைவர் வாள்வச்ச கோஸ்டம் பகுதியை சேர்ந்த முருகன் (57) மீது வழக்கு பதிவு செய்தனர்.