கன்னியாகுமரி,ஆக.5-
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று ஆடி களப பூஜை தொடங்கியது. வருடம் தோறும் ஆடி மாதம் களப பூஜை 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான களப பூஜை இன்று தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கைலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில் வாசனை திரவியங்கள் நிரப்பி பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த களப பூஜையை மணலிக்கரை மாத்தூர் மட தந்திரி சஜித் சங்கர நாராயணரூ நடத்தினார். தங்கக் குடத்தினால் அம்மனுக்கு களபாபிஷேகம் நடைபெற்றது.
அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்பு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது காலை 4.30 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய பூஜை விஸ்வரூப தரிசனம் அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு அபிஷேகம் 10 மணிக்கு சிறப்பு களபாபிஷேகம் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், திருவாவடுதுறை ஆதீன நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், சுசீந்திரம் திருவாடுதுறை ஆதின கிளை மட ஆய்வாளர் வீரநாதன், பகவதி அம்மன் பக்தர்கள், சங்க செயலாளர் முருகன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. வருகிற 15-ம் தேதி களப பூஜை நிறைவடைகிறது. தொடர்ந்து 16-ம் தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாச ஹோமம் நடைபெறுகிறது.