வேலூர், ஜூலை 24 –
எடப்பாடி பழனிச்சாமி சும்மா ஏதாவது ஊர் ஊராக போய் பேசிக் கொண்டிருக்கின்றார்; நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு 1336 பயனாளிகளுக்கு ரூபாய் 22 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வேல்முருகன் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இங்கு நாலாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே இடத்தில் இத்தனை பேருக்கு பட்டா கொடுப்பது இதுதான் முதல் முறையாகும்.
குடிசையில் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் இங்கு மழையிலே நனைந்து வெயிலில் காய்ந்து கொண்டிருந்த 4000 ஏழை மக்களுக்கு வீடு கொடுப்பதை விட மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றுமில்லை. இன்று 4000 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்குகின்றோம். இதை செய்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு புகழ் இருக்கும். ஆட்சி நடத்துகின்றவர்களும் அரசை நிர்வாகிக்கும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் சிறப்பாக செயல்பட முடியும்.
தமிழக முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை அறிந்து அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதற்காக அரசு அதிகாரிகளை பாராட்டுகின்றேன். நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தளபதி அவர்கள் எல்லா திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார். முதலமைச்சருக்கும் உங்கள் வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது: காவிரி கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால் தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு காவிரி, கோதாவரி பற்றி சுத்தமா எடப்பாடிக்கு எதுவும் தெரியாது.
உச்ச நீதிமன்றத்தின் காவிரி தீர்ப்புக்கு பிறகு இதன் நிலை என்ன என்பது குறித்து எடப்பாடிக்கு ஏதாவது தெரியுமா? சும்மா ஏதாவது ஊர் ஊராக போய் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிச்சாமி பாய் பாய் ஸ்டாலின் என ஹேஷ்டேங் போட்டுள்ளது குறித்து கேட்டதற்கு அந்த அளவுக்கு வந்து விட்டாரா? என சிரித்தார். அன்வர் ராஜா வந்ததை தொடர்ந்து அதிமுகவினர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு எனக்கு தெரியாது என பதில் அளித்தார்.
சீமான் மற்றும் விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்டதற்கு கடை விரித்த உடனே நாலு பேர் வரத்தான் செய்வான். கடையை விரித்து வைத்துக் கொண்டு யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது வாங்க வாங்க சார் என்று அழைக்கத்தான் செய்வார்கள் என்று கூறினார்.