கோவை, ஜூலை 31 –
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் சிறுதுளி, நீர் பாதுகாப்பு மற்றும் மரக்கன்றுகள் நடல் ஆகிய மேம்பாட்டுப்பணிகளில் தொடர்ந்து முன்னணி பங்காற்றி வருகிறது. கோவை
சிறுதுளி அமைப்பானது 2003-ம் ஆண்டு துவங்கப்பட்டு நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை செய்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோவை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
2019-ம் ஆண்டு முதல் மத்திய ஆயுதப்படையுடன் (CRPF) இணைந்து சிறுதுளி நிறுவனம், 53,500 மரக்கன்றுகள் நட்டதோடு 5 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் 2 கூரையடித் தொட்டிகள் அமைத்துள்ளது.
அடுத்த கட்டமாக HCL அறக்கட்டளையுடன் இணைந்து 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றத்தைத் தொடர எதிர்வரும் மாதங்களில் 9,000 மரக்கன்றுகள், 5 ஊறுநீர் குளங்கள் மற்றும் 2 வனவிலங்கு குடிநீர் குளம் உருவாக்கப்படவிருக்கின்றன. இது இயற்கை அமைப்பையும், உயிரியல் செழுமையையும் உறுதிப்படுத்தும் சிறப்பான முன்முயற்சியாகும். இந்த நிகழ்ச்சியை மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வர்/காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்வில் சிறுதுளி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன் , நிறுவனத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி குழுவினரும் பங்கேற்றனர்.
இந்த நாள் மத்திய பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 350 துணை அலுவலர்கள் (Subordinate Officers) வெளியேறும் சிறப்புநாளாகவும் அமைந்தது. அவர்களின் சாதனையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு அலுவலரும் தங்கள் தாயாருடன் சேர்ந்து ஒரு மரக்கன்றை நட்டனர். இது “ஒரு தாய்க்கு ஒரு செடி” என்ற கனிந்த கருத்தை பிணைக்கும் பசுமைச் செயலாகும்.
தாய்மையின் பாதுகாப்பும், பசுமையின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு அனைவரது மனதிலும் ஓர் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மொத்தம் 1,500 பேர் துணை அலுவலர்கள், ஜவான்கள், CRPF அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று இம்மரநடவு முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்நிகழ்வில் சிறுதுளி ஊழியர்கள், CRPF அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.