குலசேகரம், ஜூன் 3 –
குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பழங்குடி மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சமீப நாட்களாக காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஒரு யானை மோதிரமலை அருகே பழங்குடியின குடியிருப்புகள் புகுந்து மகேந்திரன் காணி என்ற தொழிலாளியின் குடிசை வீட்டை பிரித்தது. உடனடியாக மகேந்திரன் காணி மற்றும் மனைவி பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி அப்போது கூச்சல் போடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து யானையை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சத்தம் கேட்டு யானை அங்கிருந்து சென்றது. இதில் குடிசை வீடு சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக மகேந்திரன் காணி உட்பட அந்த பகுதி மக்கள் நேற்று களியல் வனச்சரக அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில் கிராமத்தில் 54 பழங்குடி குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், மக்கள் நலன் கருதி காட்டு யானைகள் உட்புகாத வகையில் சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.