மார்த்தாண்டம், ஜூலை 28 –
குமரி மாவட்டம் கஞ்சிக்குழி அரசு நடுநிலைப்பள்ளியில் தேசத்தின் முதன்மை தொழிலான விவசாயத்தின் மேன்மையை குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் முயற்சியாகவும், இளம் தலைமுறையினர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் ஆர்வம் காட்ட வழிவகை செய்யவும், மாணவர்களுக்கு விவசாயம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.
உதாரணமாக விதை விதைப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வது போன்ற பயிற்சிகளை அளிக்கவும், பாரம்பரிய உணவுகள் மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் இரண்டாவது ஆண்டாக நெல் நாற்று நடும் திருவிழா, பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள நம்மாழ்வார் இயற்கை விவசாய தோட்டத்தில் வைத்து வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பத்மநாபபுரம் உதவி வேளாண்மை அலுவலர் எபநேசர், கப்பியறை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் நெல் நாற்று நடும் முறைகளையும் விரிவாக விவரித்து நெல் நாற்று நடும் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆன்சி சோபா ராணி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.