திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 09 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தி. புதுப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் தர்மதுரை(22), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் மகன் சங்கர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இளந்துறை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பார்த்துவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது திருக்கோவிலூரில் இருந்து பெரியசெவலை நோக்கி வந்த வேன் பெண்ணைவளம் அருகே இருசக்கர வாகனம் மீது மோதி இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தர்மதுரை இறந்து விட்டதாக கூறினர். மேலும் சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்திற்கு சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.