மார்த்தாண்டம், ஜன. 10 –
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் மஹா தேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 2 வது சிவாலயமும், ரிஷபராசி பரிகார ஸ்தலமுமாக மஹா உள்ளது. இந்த கோயிலில் மஹா சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் பிரதோஷம், மாத சிவராத்திரி, திருவாதிரை, பெளர்ணமி உட்பட விசேஷ தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.
தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோயில் அருகே தாமிரபரணி ஆற்று பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது ஆறு திசை மாறி ஓடியது. இதன் காரணமாக மஹா தேவர் ஆலயத்தின் சுற்று சுவரோடு இருந்த மண் திட்டு சிறிது சிறிதாக ஆற்று வெள்ள பெருக்கு அடித்து சென்றது. இதனால் கோயில் சுற்று சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. சுற்று சுவர் இடிந்தால் அதன் தாக்கம் காரணமாக கோயிலும் இடியும் அபாயம் ஏற்பட்டதால் சுற்று சுவரை சுற்றி பாதுகாப்பிற்காக பக்தர்கள் முயற்சியால் பெரிய பாறாங்கற்கள் கொட்டபட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஆண்டு தோறும் மழை காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக இந்த பாராங் கற்களை ஆற்று நீர் இழுத்து சென்று வருவதால் இந்த கோயில் சுற்று சுவரோடு சேர்த்து பக்க சுவர் கட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். அதன் எதிரொலியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த தற்போது பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்து அறநிலையத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் கோயிலின் ஆபத்தை நேரில் ஆய்வு செய்து, பனிக்காக இந்து அறநிலையத்துறை கோயில் நிதியில் இருந்து 84 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியை பொதுபணி துறைக்கு கொடுத்து ஒப்பந்தம் விடுபட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது வரை பணிகள் துவங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இந்து இயக்கங்கள் மற்றும் பக்தர்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டு புகார் அளித்தால் அந்த நேரம் உடனே பணிகள் துவங்க போவது போன்ற பாவனைகள் காண்பித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிகள் துவங்காத சூழ்நிலை நீடிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் துவங்கி வைத்து சென்ற பிறகு கூட ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பக்கச்சுவர் கட்டுமான பணிகள் துவங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். பக்தர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணி துவங்காதது குறித்து கேட்டால் மண் தட்டுபாடு கனிமங்கள் தட்டுபாடு என்று கூறி பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் நேரத்தில் அந்தரத்தில் தொங்கும் கோயில் சுற்று சுவர் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவர் இடிந்தால் கோயில் மற்றும் பக்தர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு பழமை வாய்ந்த ஆசார ரீதியான வரலாற்று பொக்கிஷம் அழியும் பாதையில் செல்லும். எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.



