தருமபுரி, ஜூலை 10 –
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஜி.கே. மணி, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 88 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.
விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூளை சாவு அடைந்த 26 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இங்கு ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கே மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு கட்டண படுக்கை பிரிவு தற்போது பயன்பாட்டிற்கு வர உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கிய 4 லட்சம் பேருக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பை முடித்தவர்கள் தேர்வின் மூலம் அரசு டாக்டர்களாக வேண்டும். கிராமப்புறங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முன் வர வேண்டும் இவ்வாறு அமைச்சர் பேசினார். இவ்விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனராக இயக்குனர் தேரணி ராஜன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவகுமார், துணை முதல்வர்கள் தாமோதரன், ரமேஷ் பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சித் தலைவர் லட்சுமி மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.