சென்னை, ஜூலை 02 –
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நியமனத்தேர்வு ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு கோரிக்கைகளை செய்தி குறிப்பில் வலியுறுத்தினர். அவை பின்வருமாறு: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5ம் வகுப்பு வரை) காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முழுவதும் அதிகரித்து நிரப்பவேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் கூட தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் நியமிக்காத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணை எண்.01/2024, நாள் 09.02.2024-ன்படி 21.07.2024 அன்று நடந்த எஸ்.ஜி.டி நியமனத் தேர்வில் 2,768 இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கப்படுவர் என்பதை மறுபரிசீலனை செய்து தற்போது 12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 15,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக அதிகரித்து நிரப்ப வேண்டும்.
தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் ஜனவரி 2026 க்குள் 19,260 ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர் என அறிவித்துள்ளார்.
இதற்கான அரசாணை வெளியிட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், ஆசிரியர் கனவுடன் பல ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கும் தமிழக அரசு, தொடக்கப் பள்ளி இயக்குனரகம் மற்றும் பள்ளி கல்வித் துறை கோரிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.