திங்கள்சந்தை, ஆக. 3 –
கர்நாடகா மஞ்சு நாதர் கோயிலில் எலும்புக்கூடுகள் கண்டுபிடித்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கண்காணித்து அனைத்து உதவிகளையும் செய்திட கேட்டு சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கர்நாடகா தர்மஸ்தலாவில் அமைந்துள்ள மஞ்சு நாதர் கோயிலில் நடந்த அநியாயங்களுக்கு நீதி கேட்டு குமரி மாவட்ட சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் லாயம் சுசிலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொல்லங்கோடு நகராட்சி செயலாளர் துரைராஜ் ஆதரித்து பேசினார். மேரி ஸ்டெல்லா, இசக்கிமுத்து, முத்துகிருஷ்ணன், பெனில், வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடகா தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் தர்மஸ்தலாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் இந்த ஆலயத்தின் துப்புரவு தொழிலாளி ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை கோயில் நிர்வாகத்தின் மிரட்டலில் புதைத்ததாகவும் எரித்ததாகவும் கூறியுள்ளார். அந்தப் புகாரின் பேரில் நடந்த விசாரணையில் அங்கு மனித எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஞ்சுநாதர் கோயில் ஆலயத்திற்கு சுமார் 4000 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. தமிழகத்தில் உள்ளது போல் இந்து அறநிலையத்துறை அங்கு இல்லை. எனவே மன்னர்களால் கொடுத்த பல ஆயிரம் கோடி நிலத்தை தனி நபர்கள் அனுபவித்து வருகின்றனர். தற்போது விரேந்திர ஹெக்டே என்பவர் கோயிலை நிர்வகித்து வருகிறார். இவர் தற்போது மாநிலங்கள் அவையின் பாஜக எம்பி ஆவார். எனவே இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உச்ச நீதிமன்றம் அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.