கன்னியாகுமரி, ஜூன் 30 –
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தனிநபர் ஆதாயத்திற்காக சிறு வியாபாரிகளை வஞ்சிக்கும் மீன்வளத்துறையின் செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல துவங்கியிருக்கின்றனர். இந்த தொழிலை மையப்படுத்திய மக்கள் புழக்கத்தை நம்பி மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சிறு வணிகர்களால், தேநீர் கடைகள், கடலுக்கு செல்லும் மீனவர்களின் தேவைக்கான தண்ணீர் போத்தல்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் சமையலுக்கு தேவையான பொருள்களை விற்பதற்காக பாதையோர கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்தமுறை மீன்வளத்துறையால் தனிநபர் ஒருவருக்கு சிற்றுண்டிக்கடை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதோடு மற்ற சிறு வியாபாரிகள் அனைவரும் அந்த சிற்றுண்டிக்கடையின் முன்பு அமர்ந்து மட்டும் தான் வியாபாரம் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த இடத்தில் பெண்களுக்கு மட்டும் தான் வியாபாரம் செய்ய அனுமதி எனவும் ஆண்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அலுவல் பூர்வமான அரசு உத்தரவா அல்லது தனிநபரின் சுய லாபத்திற்காக அறிவிக்கப்பட்ட வெறும் வாய்மொழி உத்தரவா என்பது தெரியாத நிலை உள்ளது.
மாலை முதல் அதிகாலை வரை நடக்கும் இந்த வியாபாரத்தில் பெண்கள் ஈடுபடுவதற்கு தயக்கமாகவும் அசௌகரியமாகவும் உணர்வதாக தங்கள் கவலைகளை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருக்கின்றனர்.
மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால் அவர்களது விற்பனை பாதிக்கப்படுவதோடு அப்பகுதியில் அவர்களுக்கு தேவையான கழிவறை வசதிகளோ பாதுகாப்பு வசதிகளோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து மீன்வளத்துறையின் மக்கள் விரோத உத்தரவை ரத்து செய்து சிறு வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.