கன்னியாகுமரி, ஜூலை 28 –
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேசினார்.
தெற்கு கடல் எல்லையை சூழ்ந்து பயமுறுத்தி நிற்கும் ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் திட்டம், கரையில் தாது மணல், ஆழ்கடல் தாது மணல், புதிய இரயில் தடம் திட்டம் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் மக்கள் விரோத திட்டங்கள் திணிப்பு, கடல் வளம் காத்திட, மீன்வளம் காத்திட, மக்கள் நலம் பேணிட, மீனவர் வாழ்வாதாரம் காத்திட, மீனவ மக்கள் அடிப்படை உரிமைகளை பெற்றிட, கடல்சார்ந்த தொழில் துறைகளில் அடிப்படை விதிகளை மேம்படுத்திட வேண்டும். நீல பொருளாதாரம் என்னும் பெயரில் தமிழக கடற்கரைகளை குறிப்பாக குமரி மண்ணின் ஒட்டு மொத்த கடற்கரையையும் 30 முதல் 99 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட வழிவகுக்கும் அரசின் முடிவை கண்டித்து லைபீரிய கப்பலை சிறைபிடித்து வாழ்வாதார பாதிப்புக்குள்ளான கேரள மீனவர்களுக்கு இழப்பீடு கேட்டு போராடும் கேரள மாநில அரசு போல மக்களுக்கு துணை நின்று தமிழ்நாடு மீனவர்களுக்கும் இழப்பீடு பெற்று தர தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமோன், மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகி கிம்லர், மாவட்ட செயலாளர் வக்கீல் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு பேசினார். தெற்கு மாவட்ட தலைவர் சேதுபதி உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.