பரமக்குடி, ஜூலை 31 –
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 2026 ல் அதிமுக வேட்பாளர் என பேசாமல் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை பேசியதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பரமக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதையொட்டி பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பரமக்குடி நகரத்துக்குள் நுழையும் பொழுதே எங்களுடைய வாகனம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தவாறு இருந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியில் நம்முடைய கூட்டணி வெற்றி பெறும். அதற்கு இங்கு திரண்டு இருக்கும் மக்களே சாட்சி. திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. குடும்ப ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசாக வந்துள்ளனர். இந்த குடும்ப ஆட்சி தேவையா? மன்னராட்சி தேவையா? இந்த ஆட்சி நிராகதியாக வரும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும்.
மின் கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்துள்ளனர். பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி கடைகளுக்கு 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி மேல் வரி போடும் இந்த அரசாங்கம் தேவையா? பரமக்குடி பகுதியில் கைத்தறி நெசவாளர்களும் விவசாயிகளும் அதிக அளவில் உள்ளனர். நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கைத்தறிக்கென்று தனி ஆதரவு திட்டம் உருவாக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு 300 கோடி ரிப்பீட் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. 2019-ல் புதிய ஜவுளி கொள்கை கொண்டுவரப்பட்டது. 2 கோடி மதிப்பில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து போய் மூடும் நிலையில் உள்ளது. நெசவாளர்களுக்கு கூலி தாமதமாக கிடைக்கிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் நெய்த உடனே கூலி வழங்கினோம். பட்டு உற்பத்தியில் நிறைய திட்டங்கள் கொண்டு வந்த அரசு அதிமுக அரசு நெசவாளர்கள், விவசாயிகள் நலன் கருதி நல்ல திட்டங்களை கொடுத்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளுக்கு வங்கிகளில் கடனை தள்ளுபடி செய்யப்பட்ட அரசு அதிமுக அரசு. கண்மாய்கள் அனைத்தும் துருவாரப்பட்டது அதிமுக அரசு.
96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. மருத்துவ கல்லூரிகளில் டீன் இல்லை. மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள், டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இந்த ஆட்சி தேவையா? அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அரசியல் காழ்புணர்ச்சியால் தற்போது அவைகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் அவைகள் தொடங்கப்படும்.
14 ஆயிரத்து 400 கோடியில் காவிரி – குண்டாறு திட்டத்தை அதிமுக ஆட்சியின் போது கொண்டு வந்தோம். அதற்கு முதல் கட்டமாக 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் அனைத்து கண்மாய்களிளும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இந்த மக்கள் விரோத ஆட்சி தேவையா? மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். காவிரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்படும். இது எங்கள் லட்சியமாகும். இந்த மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கொரோனா காலத்தில் ஓராண்டு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ஏழைகள் கஷ்டபடக்கூடாது என்பதற்காகத்தான் அதிமுக அரசு அப்படி செய்தது. கொரோனாவில் விலையில்லா எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய அரசு அதிமுக அரசு. வரியும் இல்லாமல் வரவும் இல்லாமல் ஆட்சி செய்த அரசு அதிமுக அரசு. கொரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவை ஒழிக்க தமிழ்நாட்டை பின்பற்றுமாறு கூறினார். கொரோனா காலத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கவில்லை. மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர். அவர்களையும் மகிழ்விக்க ஆள் பாஸ் போட்டோம்.
மாணவர்களையும் வாழ வைத்த அரசு அதிமுக அரசு. தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கி கல்வியில் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்கிய அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றுள்ளோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, போக்குவரத்து துறை, சமூக நலத்துறை என அனைத்து துறைகளிலும் விருது பெற்றுள்ளோம். ஸ்டாலின் அரசு இப்படி உள்ளதா? மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. வாரிசு அரசியல் தான் நடக்கிறது. மகனை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் சாதனையாகும்.
கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்தார். நீட் ரத்து என்றும் அதில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை ரத்து செய்யவில்லை. தற்போது நீதிமன்றம் அதை தடை செய்ய முடியாது என சொல்வதாக கூறுகிறார். நாங்களும் அதைத்தான் சொன்னோம். உதயநிதி அதில் ரகசியம் இருக்கிறது என்றார். ஆனால் அந்த ரகசியத்தை இதுவரை அவர் சொல்லவில்லை. அரசு மற்றும் அரசு சார்ந்தவற்றில் 5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால் அதை நிரபப்படும் என்று கூறினர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு 20 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பிறக்கும் குழந்தை கூட லட்சத்து 50 ஆயிரம் கடனில் தான் பிறக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். மக்கள் மீது கடன் சுமத்தும் ஆட்சி தேவையா?
மக்கள் விரோத ஆட்சிக்கு மரண அடி கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சி மக்கள் ஆட்சி. உங்களுடைய ஆட்சி. மக்களுக்காக செயல்படும் அரசாங்கம் . மக்களுக்காக திட்டம் போடும் அரசாங்கம் . கடைக்கோடி மக்களுக்கு கூட அதிமுக திட்டம் போய் சேரும்.பரமக்குடியில் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற செய்ய வேண்டும்
பாய் பாய் ஸ்டாலின் எனக்கூறி முடித்தார்.