திங்கள்சந்தை, ஆக. 4 –
இரணியல் அருகே உள்ள மொட்டவிளையை சேர்ந்தவர் ராஜன் (43). அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (39). பிஏ பட்டதாரி. இந்த தம்பதிக்கு 12 மற்றும் 7 வயதில் மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பினார். பின்னர் ராதிகா சாலையின் இடது ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மொட்டவிளையில் இருந்து பேயன்குழி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த பைக் ராதிகா மீது பயங்கரமாக மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட ராதிகா அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி தலை சிதைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதனிடையே ராதிகா மீது மோதிய பைக் அதே வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையின் மறுபுறம் ஓரமாக நிறுத்தி இருந்த ஹிட்டாச்சி மீது பயங்கரமாக மோதி நின்றது.
இதில் பைக்கை ஓட்டி வந்த தாணிவிளையை சேர்ந்த வாலிபர் ஜெசோ (23) என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஆகாஷ் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் விசாரணை நடத்தி வருகின்றனர்.