திருப்புவனம், ஜூலை 19 –
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசார் தாக்குதலால் உயிரிழந்ததாக கூறப்படும் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த 28-ம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், அங்கு தனிப்படை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரிக்கும் முக்கியமான கொலை வழக்காக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் 5 க்கும் மேற்பட்டோர் சிபிஐ குழுவாக திருப்புவனம் வந்து விசாரணையின் ஒரு பகுதியாக அஜித் குமாரின் சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், பிரவின் குமார், வினோத்குமார் மற்றும் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஆகியோருக்கும் மற்றும் அலுவலக உதவியாளர் கார் ஓட்டுநரான கார்த்திக் வேலுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டு மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேலும், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து காவலர்களையும் சிபிஐ விசாரித்து வருவதுடன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த ஏடிஎஸ்பி சுகுமாரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு அஜித் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், கோப்புகள், சிசிடி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை ஆத்திகுளத்தில் உள்ள அலுவலகத்தில் சம்மன் வழங்கிய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.