உசிலம்பட்டி மே 16
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி கிராமத்தில் 300 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படாத நிலை நீடித்து வந்ததால், இக் கிராம மக்கள் அருகே உள்ள சந்தைப்பட்டி கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் அவதிக்குள்ளாகி வந்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து, வந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.