மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல் ஊராட்சியை இணைப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரூரல் ஊராட்சி பொதுமக்கள் நகராட்சியுடன் ரூரல் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ரூரல் ஊராட்சியில் ஏழை எளிய மக்கள் பட்டியலின மக்கள் என 85 சதவீதம் பேர் 100 நாள் வேலையை நம்பி உள்ளதால் நகராட்சியுடன் இணைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா தலைமையில் மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் அதிகாரிகள் ரூரல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம முக்கியஸ்தர்களிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.



