குளச்சல் ஜூலை 5
குளச்சல் பேருந்து நிலைய நிழல் கூடாரத்தை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி வரும் கும்பலிடம் இருந்து நிழல் கூடாரத்தை மீட்டு மீண்டும் பயணிகள் அமர நடவடிக்கை எடுக்க நகராட்சி மற்றும் காவல்துறையினருக்கு பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள காமராஜர் பழைய பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. எனவே சென்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில்
பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், மழை மற்றும் வெயில் போன்றவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படும் போது பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைத்து கொடுத்துள்ளது குளச்சல் நகராட்சி நிர்வாகம். ஆனால் பயணிகள் இருக்கை கூடாரம் தற்போது இருசக்கர வாகனம் நிறுத்தும் பார்க்கிங் இடமாக மாறி உள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக போடப்பட்ட நிழல் கூடாரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால், பயணிகள் கடும் மழையிலும், வெயிலிலும் நிழல் கூடாரத்திற்கு வெளியே நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர்
கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும்
குளச்சல் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இடையூறாக பயணிகள் நிழல் கூடாரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து பயணிகள் அமர வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.