நாகர்கோவில் ஜூலை 29
கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்தில் வார இறுதி விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள். உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உலக நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம். வார விடுமுறையை அடுத்து கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
அதன் படி, நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.ஆனால், கருமேகம் திரண்டு மழை தூறி கொண்டிருந்ததால் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர்.
ஆனால் நேற்று காலை மழை செய்து கொண்டிருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து படகு துறையில் சுற்றுலா பயணிகள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். வார இறுதி விடுமுறையை கொண்டாட குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி கன்னியாகுமரி கடலின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.