திருப்பரங்குன்றம் மலைபாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்து இந்து முன்னணி, பாஜ உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு தலைவர்களை வீட்டுக்காவலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தனர். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜ மாவட்ட தலைவர் பாலு உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டது. அதனையடுத்து மயிலாடுதுறை சின்னகடைவீதியில் உள்ள சித்திவிநாயகர் கோயில் முன்பு இந்து அமைப்புகள் சார்பில் தீபமேற்றி வழிபாடு நடத்தி திருப்பரங்குன்றம் மலைபாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன், பாஜ மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், பொதுக்குழு ஸ்ரீதர், நகரத்தலைவர் ராஜகோபால், ஒன்றியத்தலைவர் ஈழவேந்தன், முன்னாள் நகரத் தலைவர் வினோத்.மகளிரணி சித்ரா, விஸ்வ இந்து பரிஷத் வாஞ்சிநாதன், அழகிரிசாமி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி சுடமேற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டு திருப்பரங்குன்றம் மலைபாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இதில் திரளான பாஜ உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.