கன்னியாகுமரி,செப்.29-
கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆறுமுகபுரம் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. ஆதி திராவிட சமுதாய குடும்பங்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு சுடுகாடானது ஊர் அருகே அமைந்துள்ளது.
சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் நீருற்று அதிகமாக இருக்கும் இதனால் மழை காலங்களில் தண்ணீர் சூழ்ந்து விடும். எனவே இங்கு சுடுகாடு கொட்டகை அமைத்து தரவேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் சுடுகாட்டில் வெள்ளம் சூழ்ந்தது.அப்போது இறந்தவர் உடலை புதைப்பதில் சிக்கல்பட்டு, ஜேசிபி மூலம் தண்ணீரை தோண்டி வெளியேற்றி பின்னர் உடலை புதைத்தனர்.
இந்நிலையில் நேற்று ஆறுமுகபுரம் ஊர் செயலாளர் கார்த்திக்குமார் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
கடந்த மழை காலத்தில் எங்கள் பகுதியில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டில் மழை வெள்ளம் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. அப்போது இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய கடும் சிரமம் அடைந்தோம்.
இதையடுத்து, நாங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட கலெக்டருக்கு சுடுகாட்டினை சீரமைக்க மனு வழங்கினோம்.மாவட்ட கலெக்டர் சுடுகாட்டில் மணல் நிரப்பி சீரமைக்க வேண்டும் என கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அறிவுறுத்தினார்கள்.
ஆனால் கொட்டாரம் பேரூராட்சியில் நடந்த இரண்டு கூட்டத்திலும் சுடுகாட்டினை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அடுத்த மழைகாலம் தொடங்கும் நிலை உள்ளது.
மழை வருவதற்குள் கலெக்டரின் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி நிர்வாகம் சுடுகாட்டினை சீரமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் .