நாகர்கோவில் மே 17
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சமீபத்தில் பள்ளம் ஏற்பட்டு பழுதுக்குள்ளானது. இதனை சரி செய்ய சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டார். மேலும் அறிவியல் ரீதியாக மேம்பாலங்கள் கட்டும் போது குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் நீடித்த உழைப்பினை தரும் வகையில் கட்டுமான பணிகள் தரமானதாகவும், குறைபாடுகள் காணப்படாத வகையிலும் மேற்கொள்ள வேண்டுமென அவர் கூறினார். மேம்பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தெரிவிக்கையில்,
மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த மார்த்தாண்டம் மேம்பாலம், பார்வதிபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இம்மேம்பாலங்களில் நாள்தோறும் அதிக எடை கொண்ட கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள், பேருந்துகள், போக்குவரத்து வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால் பாராமரிப்பு எதுவும் இல்லாத நிலை தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சமீபத்தில் பள்ளம் ஏற்பட்டு பழுதுக்குள்ளாகி தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் வழியாக சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளார்கள். போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.
மேம்பாலங்கள் கட்டப்படுவதற்கு முன்பாக நிதியினை பெறுவதற்கும், இதனை செயல்படுத்துவதற்கும் பல்வேறு வகையில் துன்பப்பட்டு தான் இது போன்ற மேம்பாலப்பணிகள் நடைபெறுகிறது. மேம்பாலம் கட்டப்பட்டதும் அதனைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. மேம்பாலப்பணிகளில் பழுதுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது முறையான பாராமரிப்புகள், தொடர் கண்காணிப்புகள் இல்லாததே இது போன்ற நிலைக்கு காரணமாக இருக்கிறது.
அறிவியல் ரீதியாக இது போன்ற மேம்பாலங்கள் கட்டும் போது குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் (Strength and Design 15 years) நீடித்த உழைப்பினை தருகின்ற வகையில் திட்டமிட்டு தரமானதாகவும், குறைபாடுகள் காணப்படாத வகையிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற மாவட்டங்களை விட மழை அதிகமாக இருக்கும். மழையினால் சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு பழுதுகள் ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் சாலைகளை பலமானதாகவும், தரமானதாகவும் அமைக்க நவீன அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி சாலைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும். பொதுமக்களின் நலன்கருதி நடைபெறுகின்ற மேம்பாலப் சீரமைப்பு பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றி, போக்குவரத்தினை மேம்பாலத்தின் வழியாக மீண்டும் செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கே.எ.சலாம், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, முஞ்சிறை ஒன்றிய கழகச் செயலாளர் ஜீன்ஸ், திருவட்டார் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுதர்சன், கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருள்பிரகாசிங் உட்பட பலர் உடன் இருந்தனர்.