தருமபுரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை யொட்டி தமிழ் வார விழா தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். விழாவை யொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது. தமிழ்த் தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்த நாளை யொட்டி வருகின்ற ஐந்தாம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி கூறும் வகையில் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மொழியின் பெருமைகளை அனைவரும் உணர செய்யும் வகையிலும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பெருமைகளை உலகறிய செய்யும் தமிழ் மொழியின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் நாம் அனைவரும் நம் பங்களிப்பை வழங்க வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, சுற்றுலா அலுவலர் கதிரேசன், மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலர் மஞ்சுளா, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.



