தருமபுரி மாவட்ட சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள், டிஎஸ்பிகள், தாசில்தார்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல், இரண்டு கட்டங்களாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் உரிய அரசின் சேவைகள் மற்றும் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவதோடு இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலை கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் .அதிக வேகத்தில் வாகனங்களை இயக்காமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதமான வேகத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய
சாலை விதிகளை பின்பற்றும் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். போக்குவரத்து துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவதோடு விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.