அரியலூர், ஜூலை:03
அரியலூர் மாவட்டம், தலையாரிக்குடிக்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
பொதுமக்கள் சார்பில் பெ.பழனிசாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 120 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 90 குடும்ப அட்டைதாரர்கள் க.பொய்யூர் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையிலும், 30 குடும்ப அட்டைதாரர்கள் கடுகூர் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையிலும் பொருள்களை வாங்கி வருகின்றனர். சில நேரங்களில் எங்களது கிராம மக்களுக்கு பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதில்லை. இருப்பு இல்லையென்று கடை ஊழியர்கள் தெரிவித்துக்கின்றனர்.
ஆகவே எங்கள் ஊரான தலையாரிக்குடிக்காடு கிராமத்திலேயே தனியாக நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடமாடும் அங்காடி கடைக்கு கருத்துரு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் வாயிலாக பதிவாளர் அலுவலகம் மூலம் தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே எங்களது கிராமத்துக்கு நிரந்தர நியாய விலைக் கடை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்