கன்னியாகுமரி பிப் 15
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்:-
தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்களை கொள்ளையடித்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு கடத்தும் கனரக வாகனங்களால் குமரி மாவட்டத்தின் சாலைகளில் தினமும் விபத்துகளும் மரணங்களும் நடப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான பாரங்களை எடுத்து சொல்லும் இத்தகைய கனரக வாகனங்கள், எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி குறுகலான சாலைகளிலும் வாகன நெரிசல் மிக்க பகுதிகளிலும் அதிவேகமாக கடந்து செல்கின்றன.இத்தகைய வாகனங்களால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை மரணங்களின் எண்ணிக்கை மட்டும் நூறை தாண்டிவிட்டது என்பது வேதனையான உண்மை.இதனால் பொதுமக்கள் சாலைகளை பயன்படுத்தவே அச்சப்படும் நிலைதான் குமரி மாவட்டத்தில் நிலவி வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இறைச்சகுளம் பகுதியில் கட்டுப்பாடின்றி இயக்கப்பட்ட கனரக வாகனங்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.அதற்குப்பின் இத்தகைய வாகனங்களை ஆரல்வாய்மொழி வழியாக சீதப்பால்,ஆண்டிதோப்பு, பூதப்பாண்டி, துவரங்காடு சந்திப்பு, திட்டுவிளை, அழகியபாண்டிபுரம், எட்டாமடை, கேசவன்புதூர், தோமையார்புரம், தடிக்காரண்கோணம் சந்திப்பு, வீரப் புலி, சுருளோடு சந்திப்பு, பொன்மனை வழியாக குலசேகரம் சந்திப்பில் சேரும் வகையில் வழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பிட்ட இந்த வழித்தடங்களானது பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் மிக குறுகலான சாலைகளை கொண்டதாகும். இத்தகைய சாலைகளில் இதுபோன்ற வாகனங்களை அனுமதிப்பது மேலும் பல விபத்துகளுக்கும் மரணங்களுக்கும் வழிவகுக்கும். இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனும் பதட்டத்துடனும் சாலைகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையும் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி கனரக வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும், விதிகளை மீறி, உரிய ஆவணங்களின்றி அதிவேகத்துடனும் அளவுக்கு அதிகமான பாரங்களுடனும் சாலை விதிகளை மதிக்காமலும் இயங்கும் வாகனங்களை கடுமையாக கண்காணித்து சிறைப்படுத்தி உரிய தண்டனைகள் வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய பொது மக்களுக்கு பாதகம் ஏற்படும் படியான சூழல் தொடருமாயின் பெரும் திரளாக மக்களை திரட்டி போராட்டம் செய்து மக்களது கோரிக்கைகளை ஏற்கும் வகையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி தெரிவித்து கொள்கிறது என தெரிவித்துள்ளார்.