நாகர்கோவில் ஜூன் 24
இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய ஊதியம் ஆறு மண்டலங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து மூட்டா சார்பில் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழக ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் அவர்களின் ஊதிய மாற்றத்திற்காக உயர்கல்வித் துறை அரசாணை எண் 5-தினை 11.01.2021 வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து அரசாணை எண் 5 ன் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பணியாற்றிடும் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையோடு உரிய ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் அரசாணை எண் 5ன்படி இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் இன்று வரை அதற்குரிய நிலுவைத் தொகை மட்டுமல்ல அடிப்படை ஊதியம் கூட வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை,மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏதோ சில காரணங்களால் கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் மட்டும் உரிய ஊதியம் வழங்கப்பட்டு விட்டது.
உயர் கல்வித் துறையில் போதிய நிதியில்லை என்று கூறப்பட்ட நிலையில் கடந்த 2023 – 2024 நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில், செலவுகள் போக மீதம் 200 கோடி ரூபாய் நிதித்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வித் துறையில் நிதி பற்றாக்குறை என்பதும் உண்மையல்ல. மேலும் இந்த நிதியாண்டிலும் தேவையான நிதி அதாவது ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையோடு ஊதியம் வழங்க தேவையான நிதி தமிழக அரசின் நிதித் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் உயர் கல்வித் துறை இன்று வரை எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்காமல் இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய ஊதியம் ஆறு மண்டலங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.
கடந்த மூன்று ஆண்டுகளாக உயர் கல்வித் துறையிலும், கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை முறையிட்டும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
எனவே எங்களுக்கு உரிமையான, நியாயமான, சட்டப்படியான, ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மூட்டா சார்பில் சட்டப் பேரவையில் உயர்கல்வி மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் தினமான 24.06.2024 திங்கட்கிழமை மாலை திருநெல்வேலி மற்றும் மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் பெருந்திரள் மனு முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்றும் அதனை தொடர்ந்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல்
உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்திடுவது என்றும் முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு அரசு உதவி பெறும் கல்லூரியில்
பணியாற்றும் பேராசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தர
வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.