மார்த்தாண்டம், மே. 29-
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் பொன்னையன் (74). அந்தப் பகுதியில் உள்ள டாக்டர் ஒருவரது வீட்டில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவ தினம் இரவு வேலைக்கு சென்றவர், மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மகன் சதீஷ் என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பொன்னையனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திக்கிறச்சியில் உள்ள ஒரு குளத்தில் முதியவர் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மார்த்தாண்டம் போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்த போது, குளத்தில் மிதந்தது மாயமான பொன்னையன் என்பது தெரிய வந்தது. உடனடியாக பொன்னையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொன்னையன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.