நாகர்கோவில் செப் 25
குமரி மாவட்ட ஆவின் நடவடிக்கைகளால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து ஆவினுக்கு நாள் தோறும் பால் அனுப்பப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து ஆவினுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொள்முதல் செய்யப்படுகின்ற பாலின் பெரும்பகுதியினை ஆவினுக்கு வழங்கிட வேண்டுமென்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை நிர்ப்பந்தம் படுத்தி வருகிறார்கள். இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பால் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாலினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆவினுக்கு அனுப்பும் போது, பாலின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு, அதற்குரிய பணத்தை முறையாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதில்லை. ஆனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தியாளர்கள் வழங்குகின்ற பாலுக்குரிய தொகையினை சங்கங்கங்கள் வழங்கி விடுகிறது. சில நேரங்களில் ஆவின நிர்வாகம் பாலில் தரம் சரி இல்லை எனக்கூறி அதற்குரிய தொகையினை சங்கங்களுக்கு வழங்குவதில்லை. மேலும் தரப்பட்ட பாலினை சங்கங்களுக்கு ஆவின் திருப்பி கொடுப்பதும் இல்லை. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதத்திற்கும் பல நூறு லிட்டர் பால் இது போன்ற நிலைக்கு ஆளாகிறது.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவியின் காலம் முடிவுற்ற நிலையில் தற்போது செயலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஆவின் பால் விற்பனை ஏஜெண்டுகளை கொண்டு பால் பூத் இயங்கி வருகிறது. மேலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து பெருமளவு பாலினை ஆவின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்டு வருவதோடு, ஆவின் பாக்கெட் பாலினையும் வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். மேலும் ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நெய், இனிப்பு, காரம் போன்ற பிற பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் மூலம் தயாரித்து வழங்கப்படுகின்ற பிற பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்கள். ஆனால் பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களில் பசும்பாலை வாங்குவதில் விருப்பம் காட்டுகிறார்களே தவிர ஆவின் பாலை வாங்க முன்வரவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள ஆவின் பால் தேக்கத்தில் உள்ளதோடு விற்பனை செய்ய முடியாமல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
மேலும் அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் மாட்டுத்தீவனம் 50 கிலோ ரூ.450 என்ற விகிதத்தில் தரமானதாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்தன. தி.மு.க ஆட்சியில் மாட்டுத்தீவனம் முதலில் ரூ.700 ஆகவும், இதனைத் தொடர்ந்து ரூ. 900 ஆகவும், அடுத்து ரூ. 1,300 ஆகவும் விலை உயர்ந்து, மானியம் வழங்கப்படாமல் வருகிறது.
இதைப்போன்று ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலும், பால் கொள்முதல், பால் உற்பத்தியாளர் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு 25 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனைக்கு வழங்கப்படும் தாது உப்பு கிலோ ரூ.30 ஆக இருந்தது. தற்போது அது ரூ. 60 ஆக விற்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் இந்த தாது உப்பு இலவசமாக கிடைக்கிறது எனக்கூறி இந்த தாது உப்பை வாங்க முன்வருவதில்லை. ஆனால் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் இதனை வாங்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தி வழங்கி வருகிறார்கள. இதனால் நாளுக்கு நாள் பால் உற்பத்தியாளர் சங்கங்களின் வருமான தொகை குறைந்து கொண்டே வருகிறது.
ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் பாலிற்கு தரத்தின் அடிப்படையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 29.80 என விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 37 என விலை நிர்ணயம் செய்துள்ளது. இதிலிருந்து ஆவின் நிர்வாகம், தனியார் பால் நிறுவன வளர்ச்சிக்கு மறைமுகமாக துணை போகிறது என்று தெளிவாக தெரிகிறது.
இதில் இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டு தனியார் பால் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகும் ஆவின் நிறுவனத்தை சீர் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.