நாகர்கோவில், டிச. 15 –
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்ஸில் 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் நேற்று காலை தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த சென்டர் மீடியன் மீது பஸ் மோதியது. இதில் பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதை அடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து உடைந்துள்ளது, பஸ் முன் பகுதியும் சேதம் அடைந்தது.
விபத்தையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். உடனடி நெடுஞ்சாலை ரோந்து படை போலீஸ் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ்கள் மாற்று வழி பாதை வழியாக இயக்கப்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை மீட்க முயற்சி கொண்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதி சென்டர் மீடியனில் ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கனரக லாரி ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ள பகுதி குறுகலான பகுதியாக உள்ளது. எனவே அந்த பகுதியில் சாலையில் உள்ள சென்டர் மீடியன்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



