நாகர்கோவில், நவம்பர் 14 –
உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு தின விழா இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் தலைமை வகித்தார். பேராசிரியர் டாக்டர் காவேரி கண்ணன் வரவேற்றார். இந்த ஆண்டின் கருப்பொருளாகிய “நீரிழிவு மற்றும் நல்வாழ்வு” என்பதன் முக்கியத்துவத்தை விவரித்தார்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு உணவுகள் என்ற தலைப்பில் படைப்புத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் சான்றிதழ் வழங்கினர். மருத்துவ பயனாளிகளுக்கு நீரிழிவு நோய்க்கான சிறப்பு தின்பண்டங்கள் வழங்கப்பட்டன.


