தக்கலை டிச 4
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு சரல்வளை பகுதியை சேர்ந்த 24 வயதான பிளசிங் சஜூ (கிறிஸ்டியானோ சஜூ) என்பவருக்கு இரண்டு கைகளும் இல்லை .
இவர் காலால் எழுதுவது மட்டுமல்லாமல் அனைத்து வேலைகளையும் காலால் செய்து வருகின்றார். அலைபேசி, கணினி ஆகியவற்றை காலால் இயக்கக்கூடிய திறம்படைத்தவர் ஆவார்.இவர் பி.காம் பட்டதாரி ஆவார். இவருடைய விடா முயற்சி காரணமாக இவர் அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராம் வாயிலாக தனது காலால் ஃப்ரீ ஸ்டைல் கால்பந்து திறனை வெளிப்படுத்தி பிரபலமாகி வெளி உலகத்திற்கு தெரிய வருகிறார்.
அண்மையில் பஞ்சாபில் நடந்த பாரா டேக்வாண்டோ ஓபன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இச் சாதனையாளரை நேரில் வீட்டிற்கு சென்று வாழ்த்த வேண்டும் என நினைத்த சமூக அமைப்புகளான களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு அன்னை தெரெசா அறக்கட்டளையும் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையும் இணைந்து இவருக்கு அன்னை தெரசா விருது வழங்கி கவுரவித்தது.அன்னை தெரசா அறக்கட்டளையின் நிறுவனர் என்.எம்.பிரேம்ர்ஜ் மற்றும் ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையை சார்ந்த உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் இருவரும் இணைந்து இவரது வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து அன்னை தெரசா விருது- 2024 வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் கலந்து கொண்டார்.