நாகர்கோவில் நவ 30
கடந்த வாரம் கோவா ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கடலில் காணாமல் போன குமரி மாவட்ட மீனவரின் உடலை மீட்டு கொண்டு வந்ததற்கு இந்திய கப்பற்படைக்கு விஜய் வசந்த் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீன்பிடி படகு ஒன்று கோவா கடல் பகுதியில் இந்திய கப்பற் படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் 13 மீனவர்களுடன் கடலில் மூழ்கியது. இதில் 11 மீனவர்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். மீன்பிடி படகின் உள்ளிருந்த 2 மீனவர்கள் படகுடன் கடலுக்குள் மூழ்கி அவர்களை காப்பாற்ற இயலவில்லை. அதில் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ் மோன் ஆவார்.
இதையறிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதி காணாமல் போன மீனவர்களை மீட்க ஆழ்கடலில் மூழ்கி காப்பாற்ற திறனுள்ள கப்பற்படை வீரர்களை அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்று இந்திய கப்பற்படையின் வீரர்கள் ஆழ்கடலில் மூழ்கி சென்று மீட்டு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மீனவர்கள் படகின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்திய கப்பற்படை வீரர்களின் முயற்சியின் பலனாக மூழ்கிய குமரி மீனவர் ஜெனிஸ் மோனின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
அவரது உடல் ஹெலிகாப்டர் மூலமாக கோவா எடுத்து வரப்பட்டு பின்னர் சொந்த ஊரான கொட்டில்பாடுக்கு எடுத்து வரப்படுகிறது. தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்ட இந்திய கப்பற்படைக்கும், கப்பற்படை அதிகாரிகளுக்கும் விஜய் வசந்த் எம்.பி., தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.