தருமபுரி ஏப்: 30
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது,
தருமபுரி மாவட்டத்தில் எண்ணே கொல் புதூர் திட்டம், காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம், கே. ஈச்சம்பாடி அணையின் உபரிநீரை ஏரிகளை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் பாசன திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் இந்த மாவட்டத்தில் வளர்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். கே. ஈச்சம்பாடி அணையின் கால்வாய் பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது .கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் 25 ஆயிரம் நாட்டு மாடுகள் உள்ளன. இவற்றை வனப்பகுதியில் தொடர்ந்து மேய்ச்சலுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க அவற்றை சுட்டு பிடிக்கும் நடைமுறையை விரைவாக அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் மயில்களால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தருமபுரி மாவட்டத்தில் எண்ணே கொல் புதூர் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்ட பணிகள் விரைவு படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள இரண்டு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.