தூத்துக்குடி மே 1
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மேயர் பேசுகையில், “தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிதாக 1200 சாலைகள் போடப்படவுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் கீழ்தளத்தில் பேருந்து நிறுத்தப்படுகிறது இரண்டு மாடிகள் ஷாப்பிங் மாலாக உள்ளது. 3வது தளத்தில் தனியாா் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்படும்.
மாநகராட்சிக்கு 50 ஏக்கர் இடம் உள்ளது அந்த இடங்களில் மரங்கள் நடப்பட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் 2100 லைட் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஐந்து இடங்களில் ஹைமாஸ் லைட் அமைக்கப்படும். சிவன் கோவில் தெப்பகுளத்தை அழகுபடுத்தும் பணி விரைவில் தொடங்கும். சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநகராட்சி மூலம் செய்து தரப்படும்.
ஒவ்வொரு மழை காலங்களிலும் ஒவ்வொரு பாதிப்புகள் கண்டறிந்து அதனை சரி செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் வரும் காலங்களில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்கள் புதியதாக கட்டப்பட உள்ளது. மாதா கோவில் அருகில் உள்ள பயன்படுத்தப்படாமல் இருக்கும் இடத்தில் அழகு படுத்தப்பட உள்ளது.
அதுபோல ஆண்களுக்கும் எம்ஜிஆர் பூங்காவில் ராஜாஜி பூங்காவில் நடைபாதை உடன் கூடிய ஜிம் அமைக்கப்படும். 2022ம் ஆண்டு அண்ணாநகர் பகுதி பெயர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் நடைமுறையில் வரவில்லை. தற்போது டுவிபுரம் மேற்கு என்று மாநகராட்சியில் உள்ளது, மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இனிவரும் காலங்களில் அண்ணா நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
நீதிமன்றம் அருகில் உள்ள சுகாதார மையம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோல அண்ணா பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் நிபந்தனையின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. சத்யா நகரில் புதியதாக கழிப்பறை கட்டப்படுகிறது. ராஜபாண்டி நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.
இக்கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீட்டிப்பு, கழிப்பறை பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிப்பு உள்ளிட்ட 30 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றபட்ட்டது. மாமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மனு அளித்தனர். சிலர் இதுவரை நிறைவேற்றிய பல பணிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசியதாவது : தூத்துக்குடி மாநகரப் பகுதியில் புதிதாக திறக்க இருக்கும் வின்பாஸ்ட் மோட்டார் வாகன உற்பத்தி ஆலையில தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாநகரப் பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு கடுமையாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. அவர்களுக்கு நல வாரியத்தின் மூலம் உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பின்தங்கிய பகுதிகளில் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இரவு நேரங்களில் தெருக்களில் மின் விளக்குகள் சரிவாக எரிவது இல்லை அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் துணை ஆணையர் சரவணகுமார் பொறியாளர் தமிழ்செல்வன் உதவி பொறியாளர் சரவணன் உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார் வெங்கட்ராமன் நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன் உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன் காந்திமதி, முனீர்அகமது, நகரமைப்பு அலுவலர் சரோஜா, மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலெட்சுமி, கலைசெல்வி, நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கனகராஜ், கண்ணன், வைதேகி, சோமசுந்தரி, அதிர்ஷ்டமணி, ஜான்சிராணி, நாகேஷ்வரி, ஜெயசீலி, சரவணக்குமார், இசக்கிராஜா, ரிக்டா, பேபிஏஞ்சலின், சந்திரபோஸ், எடின்டா கற்பககனி, தனலெட்சுமி, முத்துமாரி, மும்தாஜ் ராமுஅம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன் ஸ்டாலின் பாக்கியநாதன் ராஜபாண்டி, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.