அரியலூர்,செப்;16
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் காவல்நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன்(43). இவரும், ஆளிநராக பணிபுரியும் வெங்கடேசனும்(35) நேற்று முன்தினம் இரவு சன்னாசிநல்லூர் – அங்கனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சுமை ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதனை சோதனைச் செய்ய மறித்துள்ளனர். ஆட்டோவை ஓட்டி வந்தநபர் நிறுத்துவது போல வந்து, அருகில் வந்ததும், இருவரது மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். ஆட்டோ மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் இருவருக்கு சிராய்ப்பு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அங்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்ச்செல்வன் மற்றும் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் தளவாய் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுமை ஆட்டோ, ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்