நாகர்கோவில் ஜூலை 26
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற மோடிஜி அரசின், முதல் நிதி நிலை அறிக்கையே ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு பெருக்கம் என அனைத்து தரப்பையும் மேம்படுத்தும் பட்ஜெட்டாக இது உள்ளது.
மத்திய அரசு வழங்கி வரும் முத்ரா கடன் உதவித் திட்டம் சிறு, குறு தொழில் செய்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்துவந்தது. அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாயாக இருந்த முத்ரா கடன் திட்டம், இப்போது இருபது லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ஏழை நடுத்தர மக்கள் வீடுகட்டும் கனவை நினைவாக்க பத்துலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் நாடெங்கிலும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இன்டர்ன்ஷிப் வழங்கப்பட உள்ளது. அதிலும் இன்டன்ஷிப் எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு ஒராண்டு பயிற்சிகாலத்தில் மாதம் 5000 ரூபாயும், ஒருமுறை உதவித் தொகையாக 6000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பும், அதற்கு தொகுப்பூதியமும் கிடைக்கும். மேலும் இதன் மூலம் அந்த மாணவன், படிப்பு முடித்த பின்பு பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்லவும் இது அடித்தளமாக அமையும்.
தங்கம் விலையால் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் நடுத்தர குடும்பத்தினர் தவித்தனர் . இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி பொருள்களின் விலை குறைந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுமே சவரனுக்கு 2200 ரூபாய் தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக வேலைக்கு சேர்ந்து பி.எப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு அவர்களுடைய வைப்பு நிதி கணக்கில் மூன்று தவணைகளாக 15,000 ரூபாய் மத்திய அரசு செலுத்த உள்ளது. இது வேலைக்குச் செல்லும் உத்வேகத்தை இளைஞர்களுக்குக் கொடுக்கும். இன்னொரு புறத்தில் மக்கள் சுகாதார துறையில் தன்னிறைவு அடையும் வகையில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் செல்போன் விலையும் குறையும்.
புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் என ;பட்ஜெட்டில் கூறியிருப்பது பட்டினி இல்லாத இந்தியாவாக தேசத்தை தொடரச் செய்யும் முன்னெடுப்பு. மொத்தத்தில் தேசத்தின் வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் இது!”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.