நாகர்கோவில், செப்டம்பர் 2 –
பொதுமக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகிலேயே குறைகளையும் கோரிக்கைகளையும் தேவைகளையும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வழிவகை செய்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவு துறை, உணவு வழங்கல் துறை, மின்சார துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மீன்வளத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை சேர்ந்த சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளில் 13 அரசு துறைகளில் 43 சேவைகள், கிராமப் பகுதிகளில் 14 அரசுத்துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தாலுகாக்களில் ஜூலை 15 முதல் நடந்து வருகிறது. முகாம்களில் மின்துறை சார்பில் மின் கட்டண பெயர் மாற்றம், மின் கட்டண மாற்றம், வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு, கூடுதல் மின் சுமை உள்ளிட்டவைகள் குறித்து 3,522 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,292 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.



