வேலூர், ஆகஸ்ட் 9 –
வேலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது மிதமானது முதல் ஒரிரு இடங்களில் கன மழை பெய்து வந்தது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் காட்பாடி அடுத்த அம்முண்டி பகுதியில் சின்ன ஓடை என்ற சிறு ஆற்றின் குறுக்கே அம்முண்டி, பூட்டுத் தாக்கு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம் மழை நீரில் இடிந்து விழுந்தது.
300 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் அம்முண்டி பகுதிக்கு முக்கிய விவசாய நிலங்கள் இந்த ஓடையின் குறுக்கே இருக்கின்ற பாலத்தை தாண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது அப்பகுதியில் உள்ள மாடுகள் மற்றும் விவசாய விலைப் பொருட்கள் கொண்டு வருவதற்கு இந்த பாலம் ஒன்றே ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது அந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் மாடுகளும் அக்கரையிலேயே அங்கேயே உள்ளது. அறுவடைக்கு செல்லும் இயந்திரங்களும் இந்த கரையிலேயே நிற்பதால் விவசாயிகள் விளைந்துள்ள நெல்லை அறுவடை செய்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் பாதி பாலம் இடிந்து நிலையில் அப்பகுதியில் சைக்கிளில் கடக்கச் சென்ற விவசாய ஒருவர் செல்லும் பொழுது பாலம் மேலும் இடிந்து விழுந்ததில் சைக்கிளோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டதால் அவர் உயிருடன் தப்பித்தார்.
ஏற்கனவே அம்முண்டி தடுப்பணைக்கு காங்கேயநல்லூரில் இருந்து மழைநீர் வந்து இணைவதற்காக தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்தப் பணிகள் மேற் கொள்ளப்படும்போது ஆகாயத்தாமரை புதர்களை சரிவர அப்புறப்படுத்தாத காரணத்தினால் அவை அனைத்தும் தரை பாலத்தின் அருகில் சேர்ந்து மண்ணரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே தரைப்பாலம் நொறுங்கி அடித்து செல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் விவசாய தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த தரை பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.