நாகர்கோவில், ஜூலை 31 –
கருங்கல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சாகித் ஜெட்லி (20). இவரை சைபர் கிரைம் வழக்கு சம்பந்தமாக போலீசார் கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது பாட்டி சூசை மரியாள் (80) என்பவர் போலீசாரை தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நேரம் போலீசார் தள்ளி விட்டதில் சூசை மரியாள் உயிரிழந்ததாக உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மூதாட்டி சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் சைபர் குற்றவாளியை தப்புவிக்க மூதாட்டி உறவினர்கள் நாடகமாடுவதாகவும், அது போன்ற சம்பவம் நடை பெறவில்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து மூதாட்டியின் உடல் தற்போது குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மூதாட்டி உடலை நீதிபதி தலைமையில் உடல் கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சூசை மரியாளின் உறவினர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு அளித்தனர். இந்த நிலையில் நேற்று குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டி உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கப்பட்டிருந்தது. அனைத்து ஏற்பாடு செய்து இருந்தது. ஆனால் சூசைமரியாளின் உறவினர்கள் யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை அடுத்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏராளம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருப்பதால் நீதிபதி தலைமையில் இன்று பிரேத பரிசோதனை நடக்கும் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று மதியம் பிற்பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் இருந்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மூதாட்டி உறவினர்கள் தரப்பில் ஒரு மருத்துவரும் மற்றும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினரும் இணைந்து மருத்துவ பரிசோதனை செய்யவும் அவற்றை வீடியோவில் பதிவு செய்யவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெள்ளிகிழமை காலை குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.